தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் - மண்டியாவில் பரபரப்பு


தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திடீரென தரையிறங்கிய ராணுவ ஹெலிகாப்டர் - மண்டியாவில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 7:28 PM GMT)

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைசூரு தசரா விழா விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீரென மண்டியா அருகே தரையிறக்கப்பட்டது. இதனால் மண்டியாவில் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டியா, 

பெங்களூரு எலகங்காவில் ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது. அங்கிருந்து நேற்று விமானப்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மைசூருவுக்கு புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் மைசூரு தசரா விழாவையொட்டி நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தது. அந்த ஹெலிகாப்டர் மண்டியா மாவட்டத்திற்கு உட்பட்ட வான் வழியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதையறிந்த ராணுவ விமானிகள் உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க முடிவு செய்தனர். அதன்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே சன்னஹள்ளி கிராமத்தின் அருகே சமதள பகுதியில் ஹெலிகாப்டரை தரையிறக்கினர்.

திடீரென அப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியதால் கிராம மக்கள் அதிர்ச்சியும், பரபரப்பும் அடைந்தனர். பின்னர் ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து ராணுவ ஹெலிகாப்டரை பார்வையிட்டனர். இதற்கிடையே ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது குறித்தும், அதனால் மைசூரு தசரா விழாவுக்கு செல்லாதது குறித்தும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு விமானிகள் தகவல் தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டரை மண்டியாவில் அவசரமாக தரையிறக்கி இருப்பது குறித்தும் அவர்கள் கூறினர். பின்னர் விமானிகள் ஹெலிகாப்டரில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர்.

இருப்பினும் அந்த ஹெலிகாப்டரை தசரா விழா சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க விமானப்படை உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை மீண்டும் பெங்களூரு எலகங்கா ராணுவ பயிற்சி மையத்துக்கு விமானிகள் கொண்டு சென்றனர். இந்த சம்பவம் மண்டியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story