பெருமாநல்லூர் ஊராட்சியில் நடந்த, கிராமசபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணிகட்டி போராடிய பொதுமக்கள்


பெருமாநல்லூர் ஊராட்சியில் நடந்த, கிராமசபை கூட்டத்தில் வாயில் கருப்பு துணிகட்டி போராடிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெறாததை கண்டித்து பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருமாநல்லூர்,

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பெருமாநல்லூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் பொடாரம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு யசோதா தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். இதில், கொசு மருந்து அடிப்பதில்லை, சாக்கடை, குப்பைகளை அகற்றுவது இல்லை என்பன உள்ளிட்ட குறைகளை கூறினர். இதையடுத்து கூட்ட இடத்திற்கு வந்த கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் வாயில் கருப்புத்துணி கட்டி, கிராம சபைக் கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது கொண்டாத்தம்மன் கோவில் நகர், கற்பகாம்பாள் நகர் முதல் வீதி, அண்ணாமலை கார்டன் பகுதியில் தெருக்குழாய், மழைநீர் வடிகால், தார்ச்சாலை உள்ளிட்டவை அமைக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றி 2 ஆண்டுகள் ஆகியும், இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர். மேலும் வீடுகளில் மின்இணைப்பில் பழுதடைந்தால், சீரமைக்க மின்வாரியத்தினர் வருவதில்லை எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு ஊராட்சி நிர்வாகத்தினர், தெருக்குழாய்கள் உடனடியாக அமைக்கப்படும். மேலும் விரைவில் நிதி பெற்று தார்ச்சாலை, மழைநீர் வடிகால் அமைக்கப்படும் எனத்தெரிவித்தனர். மேலும், பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு முதல், தேவம்பாளையம் வரை உள்ள பழுதடைந்த தார்ச்சாலை சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றியும், இதுவரை பணிகள் நடைபெறாதது ஆகியவற்றை கண்டித்தும் பொதுமக்கள் வாயில் கருப்புத்துணி கட்டி கிராம சபைக்கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story