12 ஒன்றியங்களைச் சேர்ந்த 1,380 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,380 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ள மானகிரி ஊராட்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பிற்கான சீதன பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர்பேசும்போது கூறியதாவது:-
ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த கால கட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவற்றின் தொடர்ச்சியாக ஏழ்மை நிலையில் உள்ள கர்ப்பிணிகளின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு தாயாக இருந்து அவர்களுக்கு வளைகாப்பு விழா நடத்த உத்தரவிட்டார். அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் இந்த விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1,380 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் வளையல், குங்குமம், தாம்பூலம் உள்ளிட்ட 7 வகை பொருட்கள் வழங்குவதுடன் அவர்களுக்கு 5 வகையான கலவை சாதமும் வழங்கப்படுகிறது.
மேலும் சுகாதார துறை சார்பில் கருவுற்ற பெண்களுக்கு முதல் மாதம் முதல் 10-ம் மாதம் வரை மாதாந்திர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.6 ஆயிரம் வீதம் 3 கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.
இவ்வாறு பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்கள் சுய தொழில் தொடங்கி பொருளாதார முன்னேற்றத்தை பெறும் வகையில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான தொழில் பயிற்சி மற்றும் சுழல் நிதி கடன் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. கறவை மாடு, ஆடு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி பெண்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ நாகராஜன், சிவகங்கை தொகுதி முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், ஆவின் தலைவர் கே.ஆர்.அசோகன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story