“25 டன் பிளாஸ்டிக் பறிமுதல்” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


“25 டன் பிளாஸ்டிக் பறிமுதல்” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 25 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 2-ம் கேட் பகுதியில் தூய்மையே சேவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி தூய்மையே சேவை குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மை பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருதடவை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். இந்ந நிகழ்ச்சியின் முக்கியமான நோக்கம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகும். குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். வீடுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து துப்பரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்ய ஏதுவாக இருக்கும்.

தமிழகத்தில் ஜனவரி 1-ந் தேதி முதல் ஒரு தடவை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம் ஏற்கனவே 14 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாது மாநகராட்சியின் மூலம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் வரை அபாரதம் விதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 25 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை ரூ.8 லட்சம் வரை அபாரதம் விதிக்கப்பட்டு உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் தசரா விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் பிரின்ஸ், மாநகராட்சி சுகாதார அலுவலர் லூர்தீன், சுகாதார ஆய்வாளர்கள் அரிகணேசன், ராஜசேகர், ராஜ பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story