திருவள்ளூரில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது - தப்பியோடியவருக்கு வலைவீச்சு


திருவள்ளூரில் போலி டாக்டர்கள் 4 பேர் கைது - தப்பியோடியவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 AM IST (Updated: 3 Oct 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் குடும்பநலம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பி.வி.தயாளன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாவட்டம் முழுவதும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த குழுவினர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிளினிக்குக்கு சென்று விசாரணை செய்தபோது அங்கு திலகவதி (வயது 43) என்பவர் ஆயுர்வேதம் படித்ததாக கூறி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பெரியபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் திலகவதியை கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல இக்குழுவினர் கும்மிடிப்பூண்டி, எளாவூர் பகுதியில் உள்ள 2 கிளினிக்குகளில் சோதனை செய்தபோது, அங்கு ராஜேந்திரன்(50) மற்றும் நீலகண்டன்(35) ஆகியோர் மருத்துவபடிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ராஜேந்திரன், நீலகண்டன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் பகுதியில் மருத்துவ குழுவினர் சோதனையிட்ட போது, அங்கிருந்த ஜீவத்தாரக்ராமராவ் (50) என்ற போலி டாக்டர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக, மீஞ்சூர் போலீசார் ஜீவத்தாரக்ராமராவை கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து பெரியபாளையம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் பத்தாம் வகுப்பு வரை படித்த ராமச்சந்திரன் (65) என்பவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையறிந்த அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராமச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 4 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story