அயப்பாக்கத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
அயப்பாக்கத்தில் மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
ஆவடி,
அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் மணிமாறன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவானி. இவர்களுக்கு இனியன் (வயது 7) என்ற மகன் இருந்தான். அவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
இனியன், கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக அவனை, அவனது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் இனியனுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
நேற்று முன்தினம் காலை அவனது பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இனியனை சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் மாணவன் இனியன் பரிதாபமாக இறந்தான்.
தங்கள் மகனின் உடலை கட்டிப்பிடித்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியான சம்பவம் அயப்பாக்கம் பகுதியில் பொதுமக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
அயப்பாக்கம் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலருக்கு மர்ம காய்ச்சல் பரவி உள்ளதாகவும், அதில் பள்ளி சிறுவன் பலியாகி இருப்பதாகவும் உடனடியாக மர்மகாய்ச்சல் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story