சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் செல்போன் பறித்த ஆந்திர கும்பல் கைது
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர மாநில கும்பலை போலீசார் கைது செய்தனர். தினமும் ரூ.1,000 கூலிக்கு அழைத்து வந்து கைவரிசையில் ஈடுபடுத்தியது அம்பலானது.
பெரம்பூர்,
சென்னை சென்டிரல், எழும்பூர், தியாகராயநகர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்டநெரிசலை பயன்படுத்தி ஒரு கும்பல் செல்போன் பறித்து வந்தது. பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து பூக்கடை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவி (வயது 29) என்பதும், செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடிபாதம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பதும் தெரிந்தது.
மேலும் இவர், ஆந்திராவில் இருந்து சிலரை சென்னைக்கு அழைத்து வந்து, அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்வதாக தனது வீட்டில் தங்க வைத்து, அவர்கள் மூலம் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூட்டத்தோடு கூட்டமாக கும்பலமாக புகுந்து செல்போன், நகைகளை பறித்து வந்ததும் தெரிந்தது.
இதற்காக ஆந்திராவை சேர்ந்த அந்த கும்பலுக்கு தினசரி கூலியாக ரூ.1,000 வழங்கி உள்ளார். திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செல்போன் பறிப்பில் ஈடுபடும் இந்த கும்பல், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பொதுமக்களிடம் செல்போன், நகை பறிப்பில் ஈடுபட்ட விஜயவாடாவை சேர்ந்த ரவி மற்றும் அவரது கூட்டாளிகளான நானி (19), பிண்டிராஜ்(24), ராகுல் ரவி(22), ஏசு (25), சாய் (27), ராஜேஷ்(25), ஆலோ மகேஷ்(23), சீனு என்ற சீனிவாசன் (21), துர்கா (23), பிண்டி வெங்கடேசன் (24) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 50 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 11 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story