எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 4:45 AM IST (Updated: 3 Oct 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதார வீழ்ச்சியை தடுக்காமல் எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது என புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

காந்தி பிறந்தநாளையொட்டி கொட்டாரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கன்னியாகுமரி வந்தார்.

அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சியை பழிவாங்குகிறது

மகாத்மாகாந்தி எப்படி சுதந்திரம் வாங்கி தந்தாரோ அதற்கு இப்போது மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ஒற்றுமை, மதசார்பின்மை, சத்தியாகிரகம், அகிம்சை, மக்கள் உரிமையை காப்பது இப்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி என்கிற வகையில் மத்திய மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

அவருடைய அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது. இந்திய பொருளாதார வீழ்ச்சியை தடுக்காமல் எதிர்க்கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. படிப்படியாக தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். புதுவையின் நிலை வேறு, மற்ற மாநிலங்களின் நிலை வேறு. மதுவினால் ஏற்படும் தீமைகள் எங்களுக்கு தெரியும். இருந்தாலும் கூட புதுச்சேரி மக்கள் பிரெஞ்சு கலாசார வழியில் வந்தவர்கள். இதனால் படிப்படியாக தான் அமல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியடிகள், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் கன்னியாகுமரியில் பாதயாத்திரை நடத்தியுள்ளோம். மகாத்மா காந்தி இந்தியாவிற்கான தலைவர் மட்டுமில்லை, உலகத்திற்கான தலைவர். அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் தந்தை மோடி என கூறியிருக்கிறார். அவருக்கு இந்திய வரலாறு தெரியாது. உலக வரலாறோ அல்லது அமெரிக்க வரலாறோ தெரியாது. இந்த விவகாரத்தில் மோடி, ‘நான் தேசப்பிதா இல்லை, காந்தி தான்’ என கூறவில்லை. அவ்வாறு கூறியிருந்தால் அவருக்கு பெருமை கிடைத்திருக்கும்.

வங்காளத்தில் இருக்க கூடிய மக்களின் கணக்கெடுப்பு எடுத்து வரப்படுகிறது. வெளியில் இருந்து வந்தவர்கள் துரத்தப்படுவார்கள் என்று அமித்ஷா கூறுகிறார். 70 ஆண்டுகள் ஒரு தேசத்தில் வாழ்ந்த பிறகு அவர்களது அடையாளத்தை பார்க்க வேண்டுமா? இப்படி கேட்பது ஒரு சர்வாதிகாரம், இது தவறு. நம்மிடம் வருபவர்களை நாம் வரவேற்பது நமது கலாசாரம். பா.ஜனதா கட்சி மகாத்மா காந்தியடிகளுக்கு செய்யும் நினைவுகள் அனைத்தும் பொய்யானவை. ஏனென்றால் காங்கிரசுக்கும் காந்திக்கும் இருப்பது தொப்புள் கொடி உறவு. காந்திக்கும், பா.ஜனதா கட்சிக்கும் இருப்பது துப்பாக்கி உறவு. காங்கிரஸ் கட்சி சுதந்திரத்திற்கு பின் கலைக்க வேண்டிய கட்சி என்று காந்தியடிகள் கூறியதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது, காந்தியடிகள் பற்றி முழுவதும் தெரியாத காரணத்தால் தான். அவர் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story