கடலூர், போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க கோரி கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளர்களின் அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க வேண்டும். மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கி, கடந்த ஒப்பந்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும்.
1.4.2003- க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பென்சன் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களின் அனைத்து பணப்பலன்களையும், ஓய்வு பெறும் நாள் அன்றே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளியை பணிக்கு அமர்த்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. பொருளாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் மணிவண்ணன், எம்.எல்.எப். தலைவர் தட்சிணாமூர்த்தி, அம்பேத்கர் விடுதலை முன்னணி இணை பொதுச்செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் பாஸ்கரன், எம்.எல்.எப். மாநில செயலாளர் மணிமாறன், அம்பேத்கர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக அவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் சி.ஐ.டி.யு. தலைவர் ஜான்விக்டர், எல்.பி.எப். ராஜேந்திரன், எம்.எல்.எப். துணை தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story