கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு - சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்


கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு - சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2019 3:45 AM IST (Updated: 3 Oct 2019 10:00 PM IST)
t-max-icont-min-icon

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

கோவை,

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் ஏராளமானோர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான கோவையை சேர்ந்த பாஷா, அன்சாரி உள்பட பலரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாஷா, அன்சாரி உள்பட 14 பேர் தற்போது கோவை சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் விடுதலையாகி விட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் கோவை உக்கடத்தை சேர்ந்த சாதிக் என்கிற டெய்லர் ராஜா (வயது 43), முஜிபுர் ரகுமான் என்கிற முஜி (50) ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பதும், தற்போது அவர்கள் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. பல ஆண்டுகளாக அவர்களை தேடியும் கிடைக்கவில்லை.

எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் 2 பேர் மற்றும் திருச்சி, மதுரையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய அபுபக்கர் சித்திக் (55), அஸ்ரப்அலி என்கிற அயூப் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

அத்துடன் அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். அத்துடன் அவர்கள் எங்கு தலைமறைவாகி உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

தலைமறைவான குற்றவாளிகள் 4 பேரையும் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பாபு தலைமையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அவர்கள் வெளிமாநிலங்களில் மறைந்து இருக்கிறார்களா என்பதை கண்டு பிடிக்க கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநில போலீசாருக்கும் இந்த புகைப்படங்களை அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுபோன்று அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று இருந்தாலும், இந்தியா திரும்பி வரும்போது பிடிப்பதற்கு வசதியாக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களுக்கும் அவர்களின் புகைப்படம், விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. எனவே அவர்கள் விவரம் குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் தாராளமாக தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story