வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்தபோது, புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மாவோயிஸ்டுகள் கோஷம்
வழக்கு விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்தபோது புதிய கல்வி கொள்கைக்கு எதிராக மாவோயிஸ்டுகள் கோஷமிட்டனர். இதனால் கோவை கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டில் மாவோயிஸ்டுகள் ரூபேஷ், அவருடைய மனைவி சைனா, அனூப், கண்ணன், வீரமணி ஆகிய 5 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் போலி முகவரி கொடுத்து சிம் கார்டுகள் வாங்கியதாக வழக்குகள் உள்ளன.
அதுபோன்று கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போலீஸ் நிலையங்கள் மற்றும் வனத்துறை அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்குகளும் அவர்கள் மீது உள்ளன. இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது.
ரூபேஷ் மீது கேரளாவில் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அவர் கேரள மாநிலம் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அனூப், கண்ணன், வீரமணி ஆகியோர் கோவை மத்திய சிறையில் உள்ளனர். சைனாவுக்கு ஜாமீன் கிடைத்ததால் அவர் வெளியே உள்ளார்.
அவர்கள் 5 பேர் மீதான வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபேஷ் மற்றும் அனூப், கண்ணன், வீரமணி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். ஜாமீனில் வெளியே இருக்கும் சைனாவும் கோர்ட்டில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சக்திவேல், விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து சைனாவை தவிர மற்ற 4 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டை விட்டு வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது அவர்கள் கோர்ட்டு வளாகத்துக்குள் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். மேலும் மாவோயிஸ்டுகள் தேச பக்தர்கள், அவர்களின் கோரிக்கைகள் வெற்றி பெறும் என்றும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யாவிட்டால் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவர்கள் கோஷமிட்டபடி சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story