மசினகுடி சுற்றுவட்டார கிராமங்களில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டாத ஆதிவாசி மக்கள்


மசினகுடி சுற்றுவட்டார கிராமங்களில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டாத ஆதிவாசி மக்கள்
x
தினத்தந்தி 3 Oct 2019 10:30 PM GMT (Updated: 3 Oct 2019 5:02 PM GMT)

மசினகுடி சுற்றுவட்டார கிராமங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆதிவாசி மக்கள் ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் கல்வி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர், குரும்பர் உள்ளிட்ட இனங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 

குறிப்பாக மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா, மாயார், ஆனைக்கட்டி, சிறியூர், சொக்கநல்லி உள்ளிட்ட கிராமங்களில் இருளர், குரும்பர் இன ஆதிவாசி மக்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் வன விளைபொருட்கள் சேகரிப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் கூலி தொழிலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால் கல்வியறிவில் மிகவும் பின்தங்கி உள்ளனர். 

இதே நிலை ஆதிவாசி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உண்டு உறைவிட பள்ளிகளை தொடங்கி தமிழக அரசு நடத்தி வருகிறது. மசினகுடி சுற்று வட்டாரத்தில் பொக்காபுரம், மாவனல்லா, ஆனைக்கட்டி, கார்குடி உள்ளிட்ட கிராமங்களில் உண்டு உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். 

ஆனால் சமீப காலமாக மேற்கண்ட ஆதிவாசி கிராமங்களில் செயல்படும் அரசு உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஆதிவாசி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டுவது இல்லை என்பதே ஆகும். வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வரும் குழந்தைகள், மீதமுள்ள நாட்களில் மாடு மேய்க்கவும், வீட்டு வேலை செய்யவும் தள்ளப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் முதல் நாளிலேயே 130 மாணவ-மாணவிகளை கொண்டு செயல்படும் பொக்காபுரம் அரசு பள்ளியில் 30 மாணவ-மாணவிகள் வரவில்லை. உடனே பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்றனர். 

பின்னர் பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர். சில மாணவ-மாணவிகள் ஆசிரியர்களை வீட்டின் அருகில் பார்த்த உடனே வனப்பகுதிக்குள் ஓடி சென்று மறைந்து கொண்டனர். அவர்களை பள்ளிக்கு வலுக்கட்டாயமாக அனுப்ப பெற்றோரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்தனர். 

இதே நிலை மற்ற அரசு உண்டு உறைவிட பள்ளி ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது. குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் மசினகுடி சுற்றுவட்டார ஆதிவாசி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டாதது, நீலகிரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை அதிருப்தியடைய செய்து உள்ளது. மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் தங்களது அன்றாட பணிகளில் குழந்தைகளையும் ஈடுபடுத்துகின்றனர். மாடு மேய்ப்பது, விறகு சேகரிப்பது போன்ற பணிகளை குழந்தைகள் செய்து பழகிவிடுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே ஏற்படாமல் போய்விடுகிறது. மேலும் பெற்றோரும் அதை கண்டு கொள்வது இல்லை. இன்றைய நாள் திருப்தியாக கழிந்தால் போதும் என்றே நினைக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படுவது இல்லை. இதற்கு காரணம் கல்வி குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததே ஆகும். 

எனவே ஆதிவாசி மக்கள் வசிக்கும் கிராமங்களில் கல்வி குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story