சன்ஷைன் நகரில், மீண்டும் கரடி நடமாட்டம்
கோத்தகிரி அருகே சன்ஷைன் நகரில் மீண்டும் கரடி நடமாட்டம் உள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட எஸ்.கைகாட்டி அருகே உள்ளது சன்ஷைன் நகர். இங்கு 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவில் கதவை உடைத்து கரடிகள் அட்டகாசம் செய்தன. இதையடுத்து அந்த கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அதில் ஒரு கரடி மட்டுமே சிக்கியது. மற்றொரு கரடி சிக்கவில்லை. இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் பிரேம்குமார் என்பவர் இரவு நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது அங்கு கரடி ஒன்று நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக அவர், சைகை மொழி மூலம் தனது உறவினர்களிடம் அதை தெரிவித்தார். உடனே அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீப்பந்தங்களை காட்டி கரடியை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதே பகுதியில் சுப்பிரமணி என்பவரது வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைய கரடி முயன்றது. இதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் தீப்பந்தங்களை காட்டி கரடியை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அப்போது சன்ஷைன் நகரில் மீண்டும் கரடி நடமாட்டம் தொடங்கி உள்ளதால், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story