டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு பூட்டை அறுத்து மர்ம நபர்கள் கைவரிசை


டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் 36 பவுன் நகைகள் திருட்டு பூட்டை அறுத்து மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 3 Oct 2019 11:00 PM GMT (Updated: 3 Oct 2019 7:57 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே, டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டின் பூட்டை அறுத்து 36 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 45). இவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே குணமங்கலம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல, நேற்று காலை ராமச்சந்திரன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி கீதா(40) மட்டும் தனியாக இருந்தார். கீதாவும், நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்று விட்டார். அங்கிருந்து மாலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு ஆக்சா பிளேடால் அறுக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு துணிகள் உள்ளிட்டவை சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 36 பவுன் நகைகள், விவசாய நடவு பணிக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று இருந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், ஜெயங்கொண்டம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story