வடகிழக்கு பருவமழை எதிரொலி: மாவட்டத்தில் 76 இடங்கள் பாதிப்பு ஏற்படக்கூடியவை கண்காணிப்பு அதிகாரி தகவல்


வடகிழக்கு பருவமழை எதிரொலி: மாவட்டத்தில் 76 இடங்கள் பாதிப்பு ஏற்படக்கூடியவை கண்காணிப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:30 AM IST (Updated: 4 Oct 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, மாவட்டத்தில் 76 இடங்கள் பாதிப்பு ஏற்படக்கூடியவையாக கண்டறியப்பட்டுள்ளது என கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலரும், கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரியுமான விஜயராஜ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஏழு வட்டங்களுக்கு 6 துணை கலெக்டர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் மொத்தம் 95 உறுப்பினர்களை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்துடன் பாதிப்புகள் குறித்து முதல் தகவல் அளிப்பதற்காக தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்களைச் சேர்ந்த அனைத்துத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வெள்ள பாதிப்பு தகவல்கள்

அதிக மற்றும் மிதமான பாதிப்புகள் ஏற்படும் பகுதிகள் என்று நகர்ப்புற பகுதியில் 20 இடங்களும், ஊரக பகுதியில் 56 இடங்களும் என மொத்தம் 76 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம் என்ற தகவலை பொதுமக்களிடம் தெரிவித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கரூர் மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் 3,300 பேர் பார்த்து பயன்பெறும் வகையில் பேரிடர் காலங்களில் தப்பிசெல்வது தொடர்பாக மாதிரி ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.

பாம்பு பிடிக்கும் நபர்கள் தயார்

முதல் தகவல் கொடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 760 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள், மீட்பு பணிக்காக 135 நபர்கள் தயார்நிலையில் உள்ளார்கள், மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல 162 நபர்களும், பாம்பு பிடிப்பதற்கான நபர்களும் தயார்நிலையில் உள்ளார்கள். மேலும் அவசர காலத்தில் தங்கவைப்பதற்காக 52 பள்ளிகள், 2 சமுதாய கூடங்கள், 11 திருமண மண்டபம் என 65 பாதுகாப்பான இடங்களும் தயாராக உள்ளது. எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து எந்த வித பாதிப்பும் இல்லாத நிலையை அடைய பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள் சந்தியா (கரூர்), கணே‌‌ஷ் (குளித்தலை), காவிரி ஆற்று பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பிரபாகரன், அமராவதி ஆற்று பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் விஜய குமார் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story