பழனி முருகன் கோவிலில், இறுதி கட்டத்தில் ரோப்கார் பராமரிப்பு பணி
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
பழனி,
அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்காக மின்இழுவை ரெயில் மற்றும் ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இதில் விரைவாகவும், மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகை ரசித்து கொண்டே செல்ல முடிவதால் ரோப்காரை பக்தர்கள் விரும்பி பயன்படுத்துகின்றனர்.
இந்த ரோப்காரில் தினசரி, மாதம் மற்றும் ஆண்டு பராமரிப்பு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி காரணமாக கடந்த ஜூலை 29-ந்தேதி ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ரோப்காரில் உள்ள பற்சக்கரங்கள், ரோப், பெட்டிகள், எந்திரங்கள் உள்ளிட்டவை கழற்றி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ரோப்காரில் உள்ள முக்கிய எந்திரமான ‘சாப்ட்’ தேய்மானம் அடைந்திருந்தது. இதையடுத்து மும்பையில் இருந்து புதிய ‘சாப்ட்’ வாங்கி பொருத்த கோவில் அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் இந்த ‘சாப்ட்’ வருவதில் தாமதம் ஏற்பட்டதால் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட 45 நாட்களில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ‘சாப்ட்’ கொண்டுவரப்பட்டது. பின்னர் ‘சாப்ட்’டின் உறுதி தன்மையை கோவில் ரோப்கார் வல்லுனர்கள் ஆய்வு செய்தபோது, அது பொருத்தமானது இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கோவையில் இருந்து புதிய ‘சாப்ட்’ வாங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுபற்றி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மும்பையில் இருந்து வாங்கப்பட்ட ‘சாப்ட்’டின் உறுதிதன்மையில் குறைபாடு இருந்ததால், அவை திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து கோவையில் இருந்து ‘சாப்ட்’ வாங்கப்பட்டு, இதை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து ரோப்கார் பெட்டிகள் பொருத்தப்படும். பின்னர் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு, பக்தர்களின் வசதிக்கு மீண்டும் ரோப்கார் இயக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story