டெங்கு தடுப்பு பணி தீவிரம் - கலெக்டர் தகவல்


டெங்கு தடுப்பு பணி தீவிரம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:00 AM IST (Updated: 4 Oct 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.

விருதுநகர், 

காந்தி ஜெயந்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம் மத்தியசேனை கிராமத்தில் நடந்த கூட்டத்துக்கு கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான வங்கி நேரடி கடனுதவிக்கான காசோலைகளையும் வழங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் வீடு மற்றும் பிற கட்டிடங்கள், பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் உள்ள நல்ல தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து தீவிர கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை வாரம் ஒருமுறையாவது கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.

பாத்திரங்களை கொசுக்கள் உள்ளே புகா வண்ணம் மூடி வைத்திடுவது, வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதுடன் தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது, வீட்டில் உள்ள கீழ் நிலை நீர் சேமிக்கும் தொட்டியை மூடுவது, போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வைரஸ் காய்ச்சல் நோய் குறித்து எந்தவித அச்சமும், பயமும் கொள்ள தேவையில்லை. அனைத்து காய்ச்சல் வகைகளையும் ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டால், முற்றிலுமாக குணப்படுத்த முடியும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்கள் தன்னிச்சையாக எவ்வித மருத்துவமும் மேற்கொள்ளாமல் காய்ச்சல் கண்டவுடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முழு சுகாதாரம், முன்னோடி தமிழகம் சுகாதார உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், திட்ட இயக்குனர்கள் சுரேஷ், தெய்வேந்திரன், இணை இயக்குனர்(வேளாண்மை) அருணாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சங்கர்.எஸ்.நாராயணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மரு.ராம்கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் அருகே உள்ள குண்டாயிருப்பு ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சி) சாந்தி தலைமை தாங்கினார். சத்துணவு அமைப்பாளர் ஜெயலட்சுமி, புதுவாழ்வு திட்ட பொறுப்பாளர் சுகிர்தா ஆகியோர் கலந்து கொண்டனர். குடிமராமத்து பணிகள், மழைநீர் சேமிப்பு, கொசு ஒழிப்பு, குடிநீர் சிக்கனம் பற்றி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்திற்கான ஏற்பாட்டை குண்டாயிருப்பு ஊராட்சி செயலாளர் புஷ்பராஷ் செய்திருந்தார்.

இதேபோல் ஆலங்குளம், கொங்கன்குளம், தொம்பக் குளம், சாமிநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தளவாய்புரம் அருகே உள்ள வடக்கு தேவதானம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் அருளானந்தம், உதவி வேளாண்மை அலுவலர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, ஆன்லைனில் பதிவு செய்வது எவ்வாறு என்பது பற்றி விளக்கி கூறப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் முத்துராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, பஞ்சாயத்து செயலாளர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கொத்தன்குளத்தில் நடந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி வெள்ளைச்சாமி கலந்து கொண்டார். மழைநீர் சேகரிப்பு, டெங்கு தடுப்பு நடவடிக்கை, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் தேர்வு குறித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story