திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Oct 2019 10:00 PM GMT (Updated: 3 Oct 2019 8:33 PM GMT)

பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

மெஞ்ஞானபுரம்,

மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பின்னர் மதியம் தாய்விளை கிராம மக்கள், திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன், துணை அமைப்பாளர் ராவணன், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் தமிழ்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகையிட்டவர்களிடம், உதவி கலெக்டர் தனப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் நேரில் பேசுவதாக கூறி, தூத்துக்குடிக்கு உதவி கலெக்டர் புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே நீண்ட நேரமாகியும் உதவி கலெக்டரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காததால், மாலையில் கிராம மக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டைகளை உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரின் மேஜையில் வைத்து சென்றனர். பகுதிநேர ரேஷன் கடை அமைக்கும் வரையிலும், தாய்விளையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story