மத்திய அரசின் “தவறான பொருளாதார கொள்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது” நாராயணசாமி குற்றச்சாட்டு
“மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது” என்று புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு போன்ற தவறான பொருளாதார கொள்கைகளால், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. மோட்டார் வாகன தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளன. மக்களிடம் பணப்புழக்கம் இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 9 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி தற்போது 5 சதவீதமாக குறைந்து விட்டது. இனிவரும் காலங்களில் இன்னும் மோசமான நிலை ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை சரிசெய்யாமல், பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடி பெற்றும், வங்கிகளுக்கு ரூ.74 ஆயிரம் கோடி வழங்கியும் பொருளாதார நெருக்கடியை சரிசெய்வதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.2.52 லட்சம் கோடி வரி சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய அரசு மேற்கொள்ளும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமாக அமைகின்றன. பாமர மக்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.
தமிழ் மொழியை பற்றி பெருமையாக பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். ஆனால் அதற்கு மாறாக உள்துறை மந்திரி அமித்ஷா, ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்று கூறுகிறார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். குஜராத் மாநிலத்தில் மட்டுமே மது விலக்கு உள்ளது. தென்இந்தியாவில் எங்கும் மது விலக்கு இல்லை. மது விலக்கை படிப்படியாக தான் கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story