தாராபுரத்தில் பெண் எரித்து கொல்லப்பட்ட வழக்கு: 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
தாராபுரத்தில் பெண் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம்,
தாராபுரம் கூடல்மாநகர் வீட்டுமனைப் பிரிவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு இளம் பெண்ணின் உடலை, எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசார் மீட்டனர்.
விசாரணையில் அந்த இளம் பெண்ணை, மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, அந்த பெண் யார் என்று அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, அந்த பெண்ணின் முகத்தை எரித்திருப்பது தெரியவந்தது. மேலும் இளம் பெண்ணின் சடலம் கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில், பெண்ணை கொலை செய்து, எரித்ததற்கான சில தடயங்கள் இருப்பதும் போலீசாரால் கண்டறியப்பட்டது.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் திருமணமானவர் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் இளம் பெண் கொலை செய்யப்பட்ட இடத்தில், திருமண நிகழ்ச்சிகளில் தாம்பூலம் கொடுப்பதற்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் நிறப்பையும், ஒரு எவர்சில்வர் டிபன் பாக்ஸும், பச்சை நிற துண்டும் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. எவர்சில்வர் டிபன் பாக்ஸின் மேற்புறத்தில் கருப்புசாமி என்ற பெயர் பதிக்கப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று கண்டறிந்தால், குற்றவாளியை எளிதில் கண்டறிய முடியும் என்பதால், போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும், சம்பவ இடத்தில் கிடைத்த பொருட்களையும் வைத்துக்கொண்டு, தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வீடுவீடாகச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அருகே உள்ள குண்டடம், அலங்கியம், மூலனூர், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், பல்லடம் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு, சம்பவம் குறித்து தகவல் கொடுத்து, காணாமல் போன இளம் பெண் குறித்த விபரங்களை விசாரித்து வந்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட பெண், தொழிலாளியாக இருக்கலாம் என்பதால், தாராபுரம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள நூற்பு ஆலைகள், பனியன் நிறுவனங்கள், கட்டடி மேஸ்திரிகள் மற்றும் பொறியாளர்களிடம் கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சில தகவல்களின் அடிப்படையில் போலீசார் நேற்று 2 பேரை அழைத்து வந்து, இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். தற்போது சில தகவல்களின் அடைப்படையில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்.
விசாரணையின் அடிப்படையில் குற்றவாளியை நெருங்குவதற்கு உண்டான வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் உண்மையான குற்றவாளியை கைது செய்வோம் என்றனர்.
Related Tags :
Next Story