போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கைதான திருப்பூர் தொழிலதிபர் வீட்டில் கியூ பிரிவு போலீசார் சோதனை


போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கைதான திருப்பூர் தொழிலதிபர் வீட்டில் கியூ பிரிவு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 4 Oct 2019 3:30 AM IST (Updated: 4 Oct 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

போலி பாஸ்போர்ட் தயாரிப்பு வழக்கில் கைதான திருப்பூர் தொழிலதிபர் வீட்டில் கியூ பிரிவு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்,

இலங்கையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாடு செல்ல முயற்சித்தபோது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை விமான நிலைய அதிகாரிகள், கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரேம்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், திருப்பூர் ஓடக்காடு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ராஜ்மோகன்குமார் என்பவர், பிரேம்குமாரிடம் ரூ.28 லட்சம் பெற்றுக்கொண்டு போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்தது தெரியவந்தது.

பின்னர் கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்மோகன்குமார் திருப்பூரில் அலுவலகம் அமைத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இவர் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளராக இருந்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் பனியன் ஆர்டர்களை பெறும் வகையில் பையிங் அலுவலகம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவற்றையும் இவர் நடத்தி வருகிறார். களவாணி-2 படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல இருந்த ராஜ்மோகன்குமாரை கியூ பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலின் பேரில் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் கியூ பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. இதற்கு உடந்தையாக இருந்த ராஜ்மோகன்குமாரின் பெண் உதவியாளரான ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாரதியையும் போலீசார் கைது செய்தனர். இதுபோல் பல ஆண்டுகளாக போலி பாஸ்போர்ட் தயாரித்து மேலும் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. பின்னர் ராஜ்மோகன்குமாரை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் ராஜ்மோகன்குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக தி.மு.க. தலைமை அறிவித்தது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து கியூ பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ராஜ்மோகன்குமாரை போலீஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணைக்காக நேற்று காலை திருப்பூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை திருப்பூர் ஓடக்காடு திருவள்ளுவர் வீதியில் உள்ள அவருடைய வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் கூட்டிச்சென்று வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள். 4 மணி நேரத்துக்கும் மேலாக பூட்டிய வீட்டுக்குள் கியூ பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். மதியம் 2 மணி அளவில் சோதனையை நிறைவு செய்த கியூ பிரிவு போலீசார், ஒரு பையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ராஜ்மோகன்குமாரை வேனில் ஏற்றி பின்னர் அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.

ராஜ்மோகன்குமார் வீட்டில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பு சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர். இதுபோல் திருப்பூரில் உள்ள ராஜ்மோகன்குமாரின் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனை முடிந்ததும் அவரை அழைத்துக்கொண்டு கியூ பிரிவு போலீசார் மதுரைக்கு புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story