மத்திய-மாநில அரசுகள் பேனர் கலாசாரத்தை ஒழிக்க நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் - புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பேட்டி
மத்திய, மாநில அரசுகள் பேனர் கலாசாரத்தை ஒழிக்க நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்- மந்திரி நாராயணசாமி கூறினார்.
மதுரை,
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், இந்தியா இந்துக்களின் தேசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பாரதீய ஜனதா ஆட்சியாளர்கள் இதனை உட்புகுத்த முயன்று வருகிறார்கள். இது காந்தி கொள்கைக்கு நேர்மாறானது. காந்தி உயிரோடு இருந்திருந்தால் நடக்கிற சம்பவங்களை பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று மோடி கூறினார். அப்படி என்றால் கடந்த ஆட்சி காலத்தில் 10 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தற்போது 6 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடி வருகிறார்கள். இந்தியா முழுவதும் மோட்டார் வாகனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. பணம் மதிப்பிழப்பு ஏற்பட்டு பணப்புழக்கம் குறைந்துள்ளது. தொழில்துறை அழிவு பாதைக்கு சென்றுள்ளது. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதை பற்றி கவலைப்படாமல் மோடி வெளிநாட்டு பயணம் செய்து வருகிறார். காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை கொடுத்தோம். ஆனால் தற்போது 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு தனியார் பெருநிறுவனங்களுக்கு வரிகுறைப்பை அமல்படுத்தி உள்ளது. மோடி அரசு வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் வடமாநிலங்களில் பா.ஜ.க. தலைவர்கள் மதஉணர்வை தூண்டி மீண்டும் அரியணைக்கு வந்து விட்டார்கள்.
ஐ.நா. சபையில் மோடி தமிழில் பேசினார். ஆனால் அமித்ஷாவோ இந்தி மட்டுமே ஆட்சி மொழி என கூறினார். இதில் இருந்தே பா.ஜ.க. மொழி பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது என தெரிகிறது.
புதிய கல்வி கொள்கையில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மதம் என்ற மோடியின் கனவு பலிக்காது. பிரதமர் நிகழ்ச்சிக்காக பேனர் வைக்க தமிழக அரசு நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. பேனர் வைக்க கூடாது என்ற நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் சாதாரண மக்களுக்கும், அரசியல்வாதிகள், நாட்டின் பிரதமருக்கும் பொருந்தும். பேனர் கலாசாரத்தை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story