கொட்டாம்பட்டி அருகே டிரைவரை கொன்று கார் கடத்தல்: கைதான பெண் உள்ளிட்ட 4 பேர் கூறிய திடுக்கிடும் தகவல்கள்
காரை கடத்துவதற்காக டிரைவரை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து கைதான பெண் உள்பட 4 பேர் திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
கொட்டாம்பட்டி,
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நாகநாதன் (வயது 51). இவர் கடந்த மாதம் 15-ந்தேதி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சாவரப்பட்டி விலக்கில் மொட்டாம்பாறை அடிவாரத்தில் பெரியாறு பிரிவு பாசன கால்வாயில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில், அவர் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் 9 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்ததும், அவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர் என்பதும் தெரிய வந்தது.
கடந்த மாதம் 5-ந்தேதி சென்னையில் இருந்து குற்றாலத்துக்கு தனது நிறுவனத்தில் இருந்து ஒரு காரை எடுத்து நாகநாதன் ஓட்டி வந்துள்ளார். அவருடன் காரில் ஒரு பெண் உள்பட 4 பேர் வந்துள்ளனர்.
மீண்டும் கடந்த 9-ந்தேதி தேதியன்று சென்னை வந்து விடுவதாக நாகநாதன் தொலைபேசியில் கார் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் சொன்னபடி 9-ந்தேதி சென்னைக்கு கார் வரவில்லை. மேலும் நாகநாதனின் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கார் உரிமையாளர், சென்னை அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பின்னரே பெரியாறு பாசன கால்வாய் பகுதியில் இருந்து டிரைவர் நாகநாதன் உடல் மீட்கப்பட்டது.
அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். மேலும் அவரை கொன்றுவிட்டு, அவருடன் காரில் வந்த 4 பேர்தான் காரை கடத்திச் சென்றதும் தெரியவந்ததால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த 4 பேரையும் கண்டுபிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படை போலீசார் சென்னை மற்றும் திருச்சியில் கொலையாளிகளை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஜெயசுதா (வயது 30), பெரோஸ் அகமது (34), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையைச் சேர்ந்த ஹரிகரன் (30), காஞ்சீபுரம் வடகலையைச் சேர்ந்த ஜெகதீசன் (24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளனர். கைதான ஜெயசுதா பட்டதாரி ஆவார். அவரும், பெரோஸ் அகமதுவும் ஒன்றாக படித்துள்ளனர். ஹரிகரன் பெரோஸ் அகமதுவின் நண்பர் ஆவார். சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி நன்றாக பணம் சம்பாதித்து வந்த ஜெயசுதா நாளடைவில் பெரோஸ் அகமதுவுடன் சேர்ந்து புதுச்சேரியில் ஓட்டல் நடத்தியுள்ளார். அந்த ஓட்டலில் தான் ஜெகதீசன் வேலை பார்த்து வந்தார்.
ஓட்டல் தொழிலில் போதிய லாபம் கிடைக்காததால் மேற்கண்ட 4 பேரும் சேர்ந்து கார்களை கடத்தி விற்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் நாகநாதனை காரில் வரவழைத்து குற்றாலத்துக்கு செல்லும் வழியில் தனது தோழி ஒருவரை திருச்சியில் இருந்து ஜெயசுதா ஏற்றிச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வரும் வழியில்தான் டிரைவர் நாகநாதனை கொலை செய்துவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றுவதற்காக டிரைவர் நாகநாதனை ஓய்வின்றி கார் ஓட்ட வைத்துள்ளனர். கொட்டாம்பட்டி அருகே உள்ள சாவரப்பட்டி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்த வைத்துள்ளனர். பின்னர் திடீரென டிரைவர் நாகநாதனை கழுத்து மற்றும் தலையின் பின் பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தியதுடன், இரும்பு கம்பி கொண்டும் தாக்கி கொடூரமாக கொன்றுள்ளனர். பின்னர் நாகநாதனின் உடலை இழுத்துச் சென்று அருகில் இருந்த பெரியாறு பாசன கால்வாயில் வீசிவிட்டு காரை கடத்திச் சென்றதாக தெரியவந்துள்ளது.
பின்னர் திருச்சியில் ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் முன் பணம் பெற்றுக் கொண்டு காரை அவரிடம் விற்று விட்டு அவர்கள் 4 பேரும் அரசு பஸ்சில் சென்னை சென்று அங்கிருந்து ஆந்திரா, பெங்களூரு, கோவை போன்ற இடங்களுக்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சென்னை வரும் போது போலீசிடம் சிக்கியுள்ளனர்.
இது தொடர்பாக பிடிபட்ட ஜெயசுதா உள்ளிட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story