கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ.8¼ லட்சத்தில் புல் நறுக்கும் கருவிகள் - கலெக்டர் வழங்கினார்
கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 36 பேருக்கு ரூ.8¼ லட்சத்தில் புல் நறுக்கும் கருவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 36 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான மின்சக்தியால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட கலெக்டர் பிரபாகர் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மின் சக்தியால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி பயனாளிகள் பங்களிப்பு தொகை ரூ.8 ஆயிரம், அரசு மானியம் ரூ.15 ஆயிரம் சேர்த்து ரூ.23 ஆயிரம் மதிப்பில் 36 பயனாளிகளுக்கு ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான மின்சக்தியால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு விரைவாக தீவனங்களை நறுக்கி வழங்க முடியும். இந்த எந்திரங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கால்நடைகளை பராமரித்து பால் உற்பத்தியை பெருக்கி அதிக லாபம் பெற்று நல்ல முறையில் வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர்கள் மரியசுந்தர், அருள்ராஜ், டாக்டர்கள் இன்பவேலன், சரண்யா, ஸ்ரீவித்யா, பாரதி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story