நாமக்கல்லில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
நாமக்கல்லில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் மையம் ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் முன்னிலை வகித்தார். முன்னதாக பிளாஸ்டிக் இல்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி கலெக்டர் மெகராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் எம்.ஜி.ஆர். பூங்கா அருகே தொடங்கிய ஊர்வலம் சேலம் சாலை, மணிகூண்டு வழியாக சென்று பஸ் நிலையத்தில் முடிவுற்றது. அப்போது பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் நடந்து சென்றனர்.
இதில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அசோக்குமார், நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் கமலநாதன், நகராட்சி ஆணையாளர் சுதா, துப்புரவு அலுவலர் சுகவனம் மற்றும் அலுவலக பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தனியார் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு 9 குழுவினர் தனித்தனியாக பிரிந்து நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஆங்காங்கே சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மேலும் லாரி மூலம் அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவனத்திற்கு அந்த குப்பைகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story