கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கோரி சேந்தநாட்டில் கடையடைப்பு போராட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கோரி சேந்தநாட்டில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 4 Oct 2019 9:35 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க கோரி சேந்தநாட்டில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

உளுந்தூர்பேட்டை, 

விழுப்புரம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக செயல்படும் வகையில் கலெக்டர் அலுவலகத்துக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் உள்ள திருநாவலூர் ஒன்றியத்தை 2-ஆக பிரித்து ஒரு பகுதியை விழுப்புரம் மாவட்டத்துடனும், மற்றொரு பகுதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடனும் இணைக்க வேண்டும் என ஒரு சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் திருநாவலூர் ஒன்றிய மக்கள் தங்கள் ஒன்றியத்தை பிரிக்காமல், ஏற்கனவே உள்ளது போல் உளுந்தூர்பேட்டை தாலுகாவிலேயே இருந்து புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு வகையில் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள சேந்தநாடு கிராம மக்கள், திருநாவலூர் ஒன்றியத்தை பிரிக்க கூடாது என்றும், தங்கள் பகுதியை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி சேந்தநாடு கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள ஓட்டல், மளிகைக்கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை நேற்று அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Next Story