கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக 10-ந் தேதி போராட்டம் தேவேகவுடா அறிவிப்பு


கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக 10-ந் தேதி போராட்டம் தேவேகவுடா அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 4 Oct 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக 10-ந் தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக 10-ந் தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

10-ந் தேதி போராட்டம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகர்நாடக மாவட்ட மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காமல் மத்திய அரசு கண்ணை மூடிக் கொண்டிருக்கிறது. நிவாரண நிதி வழங்கும்படி மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மழை பாதிப்பு ஏற்பட்டதும் ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. 2 மாதங்கள் ஆகியும், மத்திய அரசு நிவாரண நிதி வழங்காமல் அலட்சியமாக இருப்பது சரியல்ல. கர்நாடகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக வருகிற 10-ந் தேதி ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.

வருகிற 10-ந் தேதி கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் பெங்களூரு விதானசவுதாவில் கூடுகிறது. இதனால் அன்றைய தினம் பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள காந்தி சிலை முன்பாக ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். பின்னர் அனந்தராவ் சர்க்கிளில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு நடைபயணமாக செல்லவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் இந்த போராட்டம் நடைபெறும்.

மாநில அரசும் தோல்வி

வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபையின் உள்ளே ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மழை நிவாரணம் வழங்காதது குறித்து சட்டசபையிலும் எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்புவார்கள். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மாநில அரசும் தோல்வி அடைந்துவிட்டது. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசு தவறி விட்டது.

பா.ஜனதாவிலும் உட்கட்சி பூசல் இருக்கிறது. பெரிய தலைவர்களே மோதிக் கொள்ளும் விவகாரம் கட்சியின் மேலிடம் வரை சென்றுள்ளது. இதனால் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்தவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, மழையால் பாதிக்கப்பட்ட எந்தவொரு மாநிலத்திற்கும் சென்று பார்வையிடவில்லை. பீகாரில் மழை பாதிப்பு குறித்து டுவிட்டரில் மூலம் மட்டுமே பதிவிட்டுள்ளார். வெள்ள நிவாரணத்திற்காக எந்த மாநிலத்திற்கும் மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story