அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கற்பழிப்பு: விஷம் குடித்த விதவை பெண் சாவு


அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கற்பழிப்பு: விஷம் குடித்த விதவை பெண் சாவு
x
தினத்தந்தி 5 Oct 2019 3:45 AM IST (Updated: 4 Oct 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

மந்தாரக்குப்பம் அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி கற்பழிக்கப்பட்டதால் மனமுடைந்து விஷம் குடித்த விதவை பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் தொடர்புடைய அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தை சேர்ந்தவர் 27 வயதுடைய பெண். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய கணவர் இறந்துவிட்டதால், அந்த பெண் தன்னுடைய குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும் இவர் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்த ஜவுளிக்கடைக்கு மந்தாரக்குப்பத்தை சேர்ந்த கெங்கைகொண்டான் பேரூராட்சி முன்னாள் தலைவரும், அ.தி.மு.க. செயலாளருமான மனோகர் அவ்வப்போது சென்று வந்தார். அப்போது மனோகருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது மனோகர், அந்த பெண்ணிடம் அங்கன்வாடி மையத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் கெங்கைகொண்டானில் உள்ள தனது அலுவலகத்துக்கு வருமாறும் கூறினார்.

இதை உண்மை என்று நம்பிய அந்த பெண், ஆவணங்களுடன் மனோகரின் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர், அந்த பெண்ணை மிரட்டி கற்பழித்ததாக தெரிகிறது. இதையடுத்து மனோகர், அந்த பெண்ணுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனிடையே அந்த பெண், மனோகரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு அங்கன்வாடியில் வேலை வாங்கி தருமாறு கூறினார். அதற்கு அவர் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்ததும் மனோகரின் மனைவி மகா என்கிற மகாலட்சுமி ஆத்திரமடைந்து, ஜவுளிக்கடைக்கு சென்று அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகர் மற்றும் மகாலட்சுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண்ணின் உடல்நிலை நேற்று முன்தினம் மிகவும் மோசமானது. இதையடுத்து அந்த பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய மாதர் சங்க நிர்வாகிகளுடன் கடலூர்-விருத்தாசலம் சாலையில் கெங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மனோகர் மற்றும் அவருடைய மனைவி மகாலட்சுமியை உடனடியாக கைது செய்ய வேண்டும், இறந்து போன பெண்ணின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து விருத்தாசலம் தாசில்தார் தலைமையில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற அரசியல் கட்சியினர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story