சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: திகார் சிறையில் டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை


சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு: திகார் சிறையில் டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 4 Oct 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினார்கள்.

பெங்களூரு, 

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி. 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார்.

சிறையில் டி.கே.சிவக்குமார்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.கே.சிவக்குமாரிடம் விசாரணை நடத்திய பின்பு, சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அவரது மகள் ஐஸ்வர்யா, காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான லட்சுமி ஹெப்பால்கரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி இருந்தனர். அப்போது சட்டவிரோத பணபரிமாற்றம் மற்றும் டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருந்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக தெரிகிறது.

அதே நேரத்தில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்த போது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 4 நாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரிடம், அமலாக்கத்துறையினரால் சரியாக விசாரணை நடத்த முடியாமல் போனது. இதையடுத்து, டி.கே.சிவக்குமாரிடம் திகார் சிறையில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் சார்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. அந்த மனுவை பரிசீலித்த கோர்ட்டு டி.கே.சிவக்குமாரிடம் 2 நாட்கள் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.

அமலாக்கத்துறையினர் விசாரணை

இதையடுத்து, நேற்று காலை 9.30 மணியளவில் திகார் சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். பின்னர் அங்கு சிறைவாசம் அனுபவித்து வரும் டி.கே.சிவக்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது மகள் ஐஸ்வர்யா, லட்சுமி ஹெப்பால்கர் ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு பணபரிமாற்றம் செய்தது குறித்து டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த வழக்கில் நேற்று முன்தினம் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.யிடம் அதிகாரிகள் விசாரித்து சில தகவல்களை பெற்றிருந்தனர்.

டி.கே.சுரேஷ் அளித்த தகவல்கள் குறித்தும் நேற்று டி.கே.சிவக்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலையில் இருந்து நேற்று மதியம் 3 மணி வரை அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சிறையில் இருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். இன்றும் (சனிக்கிழமை) காலை 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை திகார் சிறையில் வைத்து டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறையினர் விசாரிக்க உள்ளனர்.

டி.கே.சுரேஷ் ஆஜர்

இதற்கிடையில், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சுரேஷ் எம்.பி. விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். நேற்றும் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அதிகாரிகள் சம்மன் வழங்கி இருந்தனர். அதன்படி, 2-வது நாளாக நேற்று காலை 11 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டி.கே.சுரேஷ் எம்.பி. விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நேற்று இரவு வரை அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

Next Story