மாவட்டத்தில் 14 லட்சத்து 27 ஆயிரத்து 340 வாக்காளர்கள்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 14 லட்சத்து 27 ஆயிரத்து 340 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வாக்காளர் பட்டியலை வெளியிட, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக பிரித்து வெளியிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், கிராம பஞ்சாயத்துகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என மொத்தம் 408 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் மாவட்ட பஞ்சாயத்தில் 17 வார்டுகள், பஞ்சாயத்து யூனியன்களில் 174 வார்டுகள், கிராம பஞ்சாயத்துகளில் 2 ஆயிரத்து 943 வார்டுகள், பேரூராட்சிகளில் 294 வார்டுகள், நகராட்சிகளில் 54 வார்டுகள், மாநகராட்சியில் 60 வார்டுகள் என மொத்தம் 3 ஆயிரத்து 542 வார்டுகள் உள்ளன.
இந்த வார்டுகளில் 2 ஆயிரத்து 533 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்காளர்களை பொறுத்தவரை 7 லட்சத்து 738 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 26 ஆயிரத்து 513 பெண் வாக்காளர்கள், 89 திருநங்கைகள் என மொத்தம் 14 லட்சத்து 27 ஆயிரத்து 340 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த வாக்காளர் பட்டியல் அனைத்தும் ஒவ்வொரு வார்டுகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு, ஏதேனும் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் இருந்தால் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதில் 1,789 வாக்குப்பதிவு எந்திரங்களும், 3 ஆயிரத்து 450 வாக்குச்சீட்டு எந்திரங்களும் ஓட்டப்பிடாரத்தில் வைக்கப்பட்டு உள்ளன. அதேபோன்று பல்வேறு படிவங்கள் தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களும் தயார்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஊரகப்பகுதிகளில் 12 வாக்கு எண்ணிக்கை மையங்களும், நகர்ப்புறங்களில் 10 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அடையாளம் காணப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்த்துறை) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் உமாசங்கர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story