குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 93 ஆயிரம் வாக்காளர்கள் - கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்
குமரி மாவட்டத்தில் 14 லட்சத்து 93 ஆயிரத்து 533 வாக்காளர்கள் இருப்பதாக, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டார். அதை கூடுதல் கலெக்டர் மெர்சி ரமணி பெற்றுக்கொண்டார். நாகர்கோவில் மாநகராட்சி வாக்காளர் பட்டியலை, ஆணையர் சரவணகுமார் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தேர்தலுக்கான நிறைவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 525 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 39 ஆயிரத்து 848 பெண் வாக்காளர்களும், 160 இதர வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 93 ஆயிரத்து 533 வாக்காளர்கள் உள்ளனர்.
எனவே வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை வாக்காளர் உதவி மென்பொருள் மூலமாக செல்போனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த மென் பொருள் மூலமாக வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் பெயர், பட்டியலில் உள்ளதா? என்பதை பார்க்க முடியும். ஆனால் இந்த மென் பொருளை குமரி மாவட்ட மக்கள் அதிகமாக பயன்படுத்துவது இல்லை. பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் இந்த மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் குமரி மாவட்டத்தில் தற்போது வரை 7 ஆயிரம் பேர் மட்டுமே மென் பொருள் மூலம் தங்களது பெயர், பட்டியலில் இருக்கிறதா? என்பதை பார்த்துள்ளனர்.
பட்டியலில் பெயர் விடுபட்டு இருந்தால் மீண்டும் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த முகாம்களில் மக்கள் பங்கேற்று தங்களது பெயரை பட்டியலில் இணைத்து கொள்ளலாம். இதை செய்யாமல் வாக்குச்சாவடிக்கு சென்ற பிறகு பெயர் இல்லை என்று கூறக்கூடாது.
உள்ளாட்சி தேர்தலுக்காக ஊரக பகுதிகளில் 864 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற பகுதிகளில் 1,208 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2,072 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநகராட்சி மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவி வாக்காளர்களால் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பதவிக்கான தேர்தலுக்கும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சி அடிப்படை இல்லாத ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் தேர்தலுக்கும், கட்சி அடிப்படையிலான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.
மேலும் சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் வரை நடக்கும். பின்னர் மாற்றங்களையும் சேர்த்து துணை பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், மாநகர செயலாளர் சந்துரு, தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநகர தலைவர் நாகராஜன், தே.மு.தி.க.வை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பல அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story