கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.3 லட்சம் சிக்கியது


கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை: கணக்கில் வராத ரூ.3 லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3 லட்சம் சிக்கியது.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலையில் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர்கள் கிரி, மாணிக்கவாசகம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரிடம் இருந்த செல்போன்களையும் போலீசார் வாங்கிக் கொண்டனர். தொடர்ந்து யூனியன் அலுவலக தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் விசாரணை முடியும் வரையிலும், யூனியன் அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

யூனியன் அலுவலகத்தில் அலுவலர்களின் மேஜைகளை திறந்து போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது, யூனியன் அலுவலகத்தில் இருந்த அலுவலர்களிடம், கணக்கில் வராத சுமார் ரூ.3 லட்சம் இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் யூனியன் அலுவலகத்தில் இருந்த பஞ்சாயத்து செயலாளர்கள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதுதவிர யூனியன் அலுவலக வளாகத்தில் நிறுத்தி இருந்த பஞ்சாயத்து செயலாளருக்கு சொந்தமான காரை போலீசார் திறந்து சோதனை நடத்தினர். அந்த பஞ்சாயத்து செயலாளர் தன்னுடைய மனைவியின் பெயரில் கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்து வந்ததும், அதன்மூலம் யூனியன் அலுவலகத்தில் பல்வேறு பணிகளை பெற்று, ஒப்பந்த முறையில் செய்து கொடுத்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பஞ்சாயத்து செயலாளரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர். இரவிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் விசாரணை நீடித்ததால், யூனியன் அலுவலக ஊழியர்களுக்கு, ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வந்து போலீசார் வழங்கினர்.

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.3 லட்சம் சிக்கிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story