கீழடி அகழாய்வு பணிகளை காண கல்லூரி மாணவிகள், வெளிநாட்டினர் வருகை


கீழடி அகழாய்வு பணிகளை காண கல்லூரி மாணவிகள், வெளிநாட்டினர் வருகை
x
தினத்தந்தி 5 Oct 2019 4:45 AM IST (Updated: 5 Oct 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை காண்பதற்காக கல்லூரி மாணவிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனைச் சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பல பகுதியில் மத்திய, மாநில தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசு தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. பின்னர் மாநில அரசின் சார்பில் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 4-வது கட்ட அகழ்வாராய்ச்சியும், கடந்த ஆண்டு முதல் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் இப்பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் முருகேசன் ஆகியோரது நிலத்தில் குழிகள் தோண்டி ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் போதகுரு, மாரியம்மாள், நீதி ஆகியோரின் நிலங்களிலும் குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றது. இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருட்கள், செப்பு காசுகள், தண்ணீர் கூஜாக்கள் உள்பட 800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிக அளவில் சுவர்கள், கழிவுநீர் வாய்க்கால் கூடிய சுவர்கள், தண்ணீர் தொட்டிகள், இரட்டை சுவர்கள் உள்பட பல பொருட்கள் கிடைத்தன.

மேலும் இந்த ஆராய்ச்சி பணிகள் கடந்த மாதம் 30-ந்தேதியுடன் நிறைவு பெற இருந்தது. இதையடுத்து தமிழக அரசு கூடுதலாக 2 வாரங்கள் வரை இதை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருட்களை பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், வெளிநாட்டினர், பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் கீழடிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் விடுமுறை தினங்களில் அதிக அளவில் மக்கள் இங்கு வந்து பார்வையிட்டு செல்கின்றனர். நேற்று காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரி மாணவிகள், பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் உள்பட பலர் வந்து பார்வையிட்டனர்.

தொடர்ந்து அமெரிக்க நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் கீழடிக்கு வந்து பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்லியல் துறை ஆய்வில் ஈடுபட்டுள்ளவர்கள், பொருட்கள் குறித்த விவரங்களை விளக்கி கூறினர். இதுதவிர அங்கு ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்த தகவல் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய தகவல்கள் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் வெளிநாட்டினர் ஆர்வமாக படித்து தெரிந்து கொள்கின்றனர். இன்னும் சிலர் அதை செல்போனில் படம் பிடித்து செல்கின்றனர்.

Next Story