வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
x
தினத்தந்தி 5 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம், 

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்நிலை பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசும் போது கூறியதாவது:- நாகை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், போலீஸ்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, தொண்டு நிறுவனங்களை சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் 4 ஆயிரத்து 464 முதல்நிலை பொறுப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கால்நடைகளுக்கு என தனியாக 2 ஆயிரம் முதல் நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் முதல் நிலை பொறுப்பாளர்கள் தங்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் குறித்து அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மக்களுக்கு தேவையான உணவு, உடைமைகள், சுத்தமான குடிநீர், மருந்து பொருட்கள், உணவுப்பொருட்கள், டார்ச் லைட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைத்திடும் வகையில் முதல்நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். பேரிடர் காலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு முதல்நிலை பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்து கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியினை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டு, முதல்நிலை பொறுப்பாளர்கள் 10 நபர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) ராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வராஜ், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகே‌‌ஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பழனிகுமார் (நாகை), கண்மணி (மயிலாடுதுறை) உள்பட அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Next Story