தர்மபுரி நீதிமன்றத்திற்கு போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேர் கைது - சேலம் அரசு பள்ளி ஆசிரியர்களும் சிக்கினர்


தர்மபுரி நீதிமன்றத்திற்கு போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேர் கைது - சேலம் அரசு பள்ளி ஆசிரியர்களும் சிக்கினர்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:00 PM GMT (Updated: 4 Oct 2019 9:40 PM GMT)

தர்மபுரி நீதிமன்றத்திற்கு போலி பணி நியமன ஆணையுடன் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவணங்கனை தயாரித்து கொடுத்த சேலம் அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும் சிக்கினர்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் தடங்கம் கிராமத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு சேலம் மாவட்டம் தோரமங்கலம் கணபதி நகரை சேர்ந்த வேல்முருகன் (வயது 38), மோகன் நகரை சேர்ந்த தவச்செல்வன் (39) ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்ற நிர்வாக அலுவலர் பாஸ்கரனை சந்தித்து கோர்ட்டில் தங்களுக்கு பணி வழங்கியதாக ஆவணங்களை வழங்கினர். அப்போது அவர்கள் கொண்டு வந்தது போலி பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது.

மேலும் நீதிமன்றத்தில் எந்த வேலைக்கும் நேர்முக தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கவில்லை என்றும், 2 ஆணைகளும் போலி ஆணை என்றும் அலுவலர் பாஸ்கரன் தெரிவித்தார். பின்னர் அவர் இதுகுறித்து அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நீதிமன்ற வளாகத்திற்கு சென்று 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் போலி பணி நியமன ஆணை வழங்கிய வேல்முருகன், தவச்செல்வன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்த இளையராஜா(39), பத்மநாபன்(37) ஆகிய 2 பேரும் இவர்களிடம் வேலைக்காக ரூ.8 லட்சம் வாங்கி கொண்டு போலி பணி நியமன ஆணைகளை தயாரித்து வழங்கியதும், இதில் இளையராஜா முக்கிய நபராக செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் இளையராஜா லட்சுமாயூரில் உள்ள அரசு பள்ளியிலும், பத்மநாபன் கோணாங்கிப்பட்டி அரசு பள்ளியிலும் ஆசிரியர்களாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போலி பணி நியமன ஆணை தயாரித்து கொடுத்த ஆசிரியர்கள் இளையராஜா, பத்பநாபன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள், போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கிய சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story