பரமத்தி வேலூரில், ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வு
பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏல சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்வடைந்தது.
பரமத்திவேலூர்,
பரமத்தி வேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும்,சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் லாரிகள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோல சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் இங்கு நடைபெற்ற ஏலத்திற்கு 800 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.550-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 3,500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.400-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.500-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.8-க்கு விற்பனையானது.
ஆயுத பூஜையை முன்னிட்டு பரமத்தி வேலூரில் நடைபெற்ற வாழைத்தார் ஏல சந்தைக்கு நாமக்கல்,சேலம், தர்மபுரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுக்க வந்திருந்தனர். ரஸ்தாலியை தவிர மற்ற வாழைத்தார்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், எதிர்பார்த்த விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
Related Tags :
Next Story