உள்ளாட்சி தேர்தல்: வேலூர் மாவட்டத்தில் 31 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் - பட்டியலை வெளியிட்டு கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். மாவட்டத்தில் 31 லட்சத்து 4 ஆயிரத்து 514 வாக்காளர்கள் உள்ளனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று மாலை வெளியிட்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு மொத்தம் 5 ஆயிரத்து 75 வாக்குச்சாவடி மையங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் ஊரகப்பகுதிகளில் 3 ஆயிரத்து 812 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற பகுதிகளான பேரூராட்சிகளில் 267 வாக்குச்சாவடிகளும், நகராட்சிகளில் 623 வாக்குச்சாவடிகளும், மாநகராட்சியில் 373 வாக்குச்சாவடிகளும் பயன்படுத்தப்படவுள்ளது.
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஊரகப்பகுதிகளில் 19 லட்சத்து 48 ஆயிரத்து 230 பேரும், பேரூராட்சிகளில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 652 பேரும், நகராட்சிகளில் 5லட்சத்து 86 ஆயிரத்து 207 பேரும், மாநகராட்சியில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 425 பேரும் என மொத்தம் 31 லட்சத்து 4 ஆயிரத்து 514 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் பணியில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
ஊரகங்களை பொறுத்தவரையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், நகரங்களை பொறுத்தவரையில் தொடர்புடைய நகர்புற அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக இந்த வாக்காளர் பட்டியல் வைக்கப்பட உள்ளது.
தேர்தல் அட்டவணை கிடைக்கப்பெற்ற பின்னர் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் கடைசி நாள் வரையும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கோ அல்லது நீக்கம் செய்வதற்கோ வாய்ப்பளிக்கப்படும். புதியதாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்ட பின்னர் துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களும் தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன், மண்டல இயக்குனர் (நகராட்சி நிர்வாகம்) விஜயகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திருஞானம், மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சுப்புலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story