19-ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் வள்ளலார் நீதிபதி கோமதிநாயகம் பேச்சு


19-ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் வள்ளலார் நீதிபதி கோமதிநாயகம் பேச்சு
x
தினத்தந்தி 6 Oct 2019 4:15 AM IST (Updated: 5 Oct 2019 8:43 PM IST)
t-max-icont-min-icon

19-ம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தங்களை செய்தவர் வள்ளலார் என்று மாவட்ட நீதிபதி கோமதிநாயகம் பேசினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட வள்ளலார் பேரவை சார்பில் திருவருட்பிரகாச வள்ளலாரின் 197-வது ஆண்டு அவதார தினவிழா நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற குமரி மாவட்ட தலைவர் பாரத்சிங் வரவேற்று பேசினார்.

அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வள்ளலாரின் உருவப்படத்தை இந்துக்கல்லூரி தலைவர் ஆறுமுகம்பிள்ளை திறந்து வைத்தார். குமரி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி எம்.கோமதி நாயகம் அருட்ஜோதியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புரட்சி கண்ட ஞானி

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகம் முழுவதும் அன்பினால், பண்பினால், ஒருமனதுடன் அரவணைத்துச் சென்றவர்கள் நமது தமிழ் முன்னோர்கள். அந்த வகையில் நீண்ட, இலக்கிய மரபுள்ள தமிழின் தனித்தன்மைகள் வாய்ந்த, புதுமரபு படைத்த புதுமைச் சிற்பிகளில் ஒருவர் வள்ளலார் என்று சொல்லலாம். சமூகம், அறிவியல், ஆன்மிகம் ஆகியவற்றில் புரட்சி கண்ட ஞானி.

சாதி, சமய கட்டுப்பாடு, ஆச்சாரங்கள் நிறைந்திருந்த 19-ம் நூற்றாண்டில் பல சமூக சீர்திருத்தங்களை செய்தவர் வள்ளலார். அவரது பெயரைச் சொல்லும்போதே அவருடைய பாடல் வரிகளான வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது தான் ஞாபகத்துக்கு வரும். அந்த வகையில் அவர் மனிதர்களிடம் மட்டும் இரக்கத்தை காட்டுவதோடு மட்டுமில்லாமல் பிற உயிர்களிடத்தும் இரக்கத்தை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

ஜோதியில் ஐக்கியம்

வள்ளலார் நம்மிடையே வாழ்ந்தவர். நமக்கு தெரிந்த அவர் வாழ்ந்த இடங்கள், வசித்த இடங்கள் என்று இன்றும் இருக்கின்றன. அவற்றை பார்த்தால் அவருடைய பெருமைகளை தெரிந்து கொள்ள முடியும். அத்தகைய மகான்களுக்கு சிலை வைத்து கும்பிடக்கூடிய இந்த கால கட்டத்தில் வள்ளலாருக்கு என்று எந்த ஊரிலும் சிலை வழிபாடு கிடையாது.

எல்லா ஞானிகளும், பல மத தலைவர்களும் இறைவனிடம் வேண்டுவது என்னவென்றால் பிறந்து விட்டோம், இனி பிறவாமல் இருக்க வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால் வள்ளலார் ஒருவர் தான் பிறந்து விட்டோம், இறந்தால் தானே மீண்டும் பிறக்க வேண்டும். ஆகையால் இறவாமல் இருக்க முடியுமா? என்று சிந்தித்தார், செயல்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார். அந்த ஜோதியில் ஐக்கியம் ஆனார்.

அதன் நினைவாகத்தான் வள்ளலாரின் பிறந்த நாளிலோ, அல்லது ஜோதி நிகழ்ச்சியோ கொண்டாடும் போது விளக்கு வைத்து ஜோதியை ஏற்றி வணங்குகிறோம். அனைவரும் ஜோதியின் உண்மைத்தன்மையை அறிந்து அந்த ஜோதியில் நாமும் ஐக்கியம் ஆக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கோமதிநாயகம் பேசினார்.

விருது

பின்னர் அவர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம்பிள்ளை, குமரி மாவட்ட கோவில்கள் பொறியாளர் ராஜகுமார் உள்ளிட்டோருக்கு வள்ளலார் விருதுகளை வழங்கினார். விழாவில் திருத்தவம் திறவாயோ என்ற திருவருட்பா குறுந்தகட்டை குமரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி கே.அருணாசலம், வள்ளலார் வாழ்வியல் படங்கள் அடங்கிய மலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் வெளியிட்டனர். பரத நாட்டிய கலைஞர்களுக்கு நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர் சான்றிதழ்கள் வழங்கினார். நெல்லை மாவட்ட கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் கயரத் மோகன்தாஸ் மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஆர்.நம்பி, இந்துக்கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு, தமிழ்நாடு முதுநிலை கோவில் பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வள்ளலார் பேரவை பொருளாளர் பி.மகேஷ் நன்றி கூறினார்.

Next Story