குளத்தில் மூழ்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


குளத்தில் மூழ்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 5 Oct 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே குளத்தில் மூழ்கி இறந்த மாணவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் உள்ள வானமுட்டி பெருமாள் கோவில் குளத்தில் கடந்த 27-ந் தேதி குளிக்க சென்ற அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் சஞ்சய்குமார் (வயது 16) என்பவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இந்த குளத்தில் சட்டத்திற்கு புறம்பாக அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டி மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் மூழ்கி மாணவர் சஞ்சய்குமார் இறந்து போனதாகவும், இந்த மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இறந்த மாணவர் சஞ்சய்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் நேற்று மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் மாசிலாமணி, கிளை செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், சிங்காரவேலன், மாரியப்பன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நடவடிக்கை

ஆர்ப்பாட்டத்தின் போது மயிலாடுதுறை பகுதியில் குளம் தூர்வாருதல் என்ற பெயரில் அளவுக்கு அதிகமான அளவு ஆழம் தோண்டி வண்டல் மண் மற்றும் மணலை எடுத்து விற்க அனுமதி வழங்கி வரும் தாசில்தார், அதற்கு துணை போகும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதில் வட்டக்குழு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story