சட்டமன்ற பேரவை குழுவுக்கு மனு அனுப்பலாம் - கலெக்டர் தகவல்


சட்டமன்ற பேரவை குழுவுக்கு மனு அனுப்பலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:45 AM IST (Updated: 6 Oct 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். இதனால் பொது பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் மனு அனுப்பலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்,

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2019-20-ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் கூடி ஆய்வு செய்ய உள்ளது. இதையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்த மனுக்களின் 5 நகல்களை மனுதாரர் கையொப்பம் மற்றும் தேதியுடன் தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை-600 009 என்ற முகவரிக்கு வருகிற 25-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப் படாமல் இருக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்த மனுக்களும் இருக்கலாம். ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்.

தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை குறித்ததாக இருக்கக்கூடாது.

சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும். அதேசமயம் மனுதாரர் முன்னிலையில் குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

இதுகுறித்து மனுதாரர் களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 25-ந்தேதிக்கு பின்பு பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது. இந்த தகவலை கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

Next Story