புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு


புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 6 Oct 2019 3:00 AM IST (Updated: 6 Oct 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்தலோசனர் பெருமாள் கோவில், தேவர்பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் ஆகியவற்றில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தரிசனம், நித்தியல் பூஜை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமிக்கு துளசிமாலை, செந்தாமரை சாத்தி வழிபட்டனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் வளாகங்களில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு துளசி, தீர்த்தம் வழங்கப்பட்டது.

கோவில் வளாகங்களில் பக்தர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் ராதா, இசக்கியப்பன், கணேஷ்குமார், சீனிவாச அறக்கட்டளை ஆலோசகர் கசங்காத்த பெருமாள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி பெருமாள், பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். பெண்கள் பலர் தீபம் ஏற்றி சாமியை வழிபட்டனர்.

கோவில்பட்டி பூதேவி நீலாதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story