சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
சங்கரன்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் பகுதியில் ஏற்கனவே 2 தனியார் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மேலும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில், செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருவதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை தொடங்க தொழிலாளர்கள் அங்கு வந்தனர். உடனே இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தொழிலாளர்கள் பணியை தொடங்காமல் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு தொழிலாளர்கள் அங்கு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு சென்றனர். மேலும் அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்கரன்கோவில்-கழுகுமலை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story