சூளகிரி அருகே, தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தந்தை-மகன் பரிதாப சாவு
சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தந்தை - மகன் பலியானார்கள்.
ஓசூர்,
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த அத்தாணி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 36). இவரது மகன் முகில் (8) இவர்கள் இருவரும், ஆயுத பூஜையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பூ வாங்குவதற்காக சரக்கு வாகனத்தில் நேற்று வந்தனர்.
ஓசூர் அருகே உள்ள உலகம் என்ற கிராமத்தை அடுத்த ராமாபுரம் தென்பெண்ணை ஆற்றில், நேற்று மாலை அவர்கள் வாகனத்தை நிறுத்தி கழுவிக் கொண்டிருந்தனர்.
அப்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சென்று கொண்டிருந்தது. அவர்கள் ஆற்றில் இறங்கி வாகனத்தை கழுவி கொண்டிருந்த நேரத்தில் தண்ணீரின் அளவும் அதிகரித்து கொண்டே இருந்தது.
அப்போது வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த பாலாஜி மற்றும் அவரது மகன் முகில் ஆகியோரை ஆற்று வெள்ளம் இழுத்து சென்றது. இதில், அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். தந்தை-மகன் இருவரும் தண்ணீரில் பிணமாக மிதந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ராயக்கோட்டை தீயணைப்பு வீரர்களும்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி பலியான பாலாஜி, முகில் ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களது உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தில் சிக்கி தந்தை - மகன் பலியான சம்பவம் சூளகிரி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story