தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த தடுப்பணைகளை சீரமைக்க நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த தடுப்பணைகளை சீரமைக்க நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2019 11:00 PM GMT (Updated: 5 Oct 2019 9:43 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த தடுப் பணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி அன்னசாகரத்தில் உள்ள ஏரியில் ரூ.70 லட்சம் மதிப்பில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏரியின் கரையை பலப்படுத்தி ஏரிக்கு மழை தண்ணீர் வரும் கால்வாய்களில் இருந்த அடைப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் ஏரி கரையோர பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த தொடர்மழையால் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் அன்னசாகரம் ஏரியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஏரியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கலெக்டர் மலர்விழியுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர் மோகனபிரியா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் குடி மராமத்து திட்டத்தின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள 10 ஏரிகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின்கீழ் அன்னசாகரம் ஏரியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இந்த ஏரிக்கு மழை தண்ணீரின் வரத்து அதிகரித்து இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதேபோன்று ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 458 ஏரிகள், குளங்கள், குட்டைகளில் ரூ.19 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வத்தல்மலை அடிவாரத்தில் மழை காரணமாக தடுப்பணை சேதமடைந்து இருப்பது தொடர்பாக முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். நல்லம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட மாரியம்மன் கோம்பை தடுப்பணை சீரமைக்கப்பட்டு தற்போது அங்கு மழைநீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. அரூர் அருகே குமாரம்பட்டியில் தடுப்பணையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பழுதடைந்த தடுப்பணைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தர்மபுரி மாவட்டத்தில் நீர்மேலாண்மை திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story