தொடர் விடுமுறை: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர்.
ஊட்டி,
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த விடுமுறையை குளு, குளு காலநிலை நிலவும் ஊட்டியில் அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்ததை காண முடிந்தது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் மூலம் 2-வது சீசன் களை கட்டியது. இதையொட்டி பல்வேறு ரகங்களை சேர்ந்த 15 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் பூத்து குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், அதன் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.
சுற்றுலா பயணிகள் பூங்காவில் நுழைந்ததுமே, அவர்களை வரவேற்கும் வகையில் மேரிகோல்டு மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இது அவர்களை வசீகரிக்கிறது. கார்னேசன் மலர்களால் ஆன செல்பி ஸ்பாட் நடுவே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.
பச்சை பசேல் என காட்சி அளிக்கும் புல்வெளியில் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். பெரிய புல்வெளி மைதானம் மற்றும் இருக்கைகளில் அமர்ந்து பூங்காவின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். நூற்றாண்டை கடந்த வெளிநாட்டு மரங்கள் அவர்களுக்கு வியப்பாக இருந்தது.
ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்ததோடு, அவர்கள் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர். அதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைன்பாரஸ்ட், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சில இடங்களில் சாலையோரம் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story