காட்பாடியில் மளிகை கடைக்காரரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி - ஹெல்மெட் ஆசாமிகள் 2 பேருக்கு வலைவீச்சு
காட்பாடியில் மளிகை கடைக்காரரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறித்துச்சென்ற ஹெல்மெட் ஆசாமிகள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காட்பாடி,
காட்பாடியில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் செயினை பறித்து செல்லும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் மளிகை கடைக்காரரிடம் ரூ.5 லட்சத்தை பறித்து சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு:-
காட்பாடி தாராபடவேடு இளங்கோ தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). இவர், தாராபடவேட்டில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தினமும் இரவு 10 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு, அன்று வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு செல்வார்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அன்று வசூலான பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு, கடையின் ஷட்டரை பூட்டியிருக்கிறார். அப்போது அந்த பகுதியில் ஹெல்மெட் அணிந்த 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்தனர்.
சுரேஷ்குமார் ஷட்டரை பூட்டிய நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த மர்மநபர்கள் இருவரும், சுரேஷ்குமாரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். ஆனால் சுரேஷ்குமார் அவர்களுடன் சிறிது நேரம் போராடியிருக்கிறார். ஆனாலும் மர்மநபர்கள் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சுரேஷ்குமார் காட்பாடி போலீசில் புகார் செய்தார். அதில் தினமும் ரூ.4½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரைக்கும் வியாபாரம் நடக்கும் என்றும், அதனால் மர்மநபர்கள் பறித்துச்சென்றது ரூ.4½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை இருந்திருக்கும் என்று கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.5 லட்சத்தை பறித்துச்சென்ற ஹெல்மெட் ஆசாமிகள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story