திருக்கனூர் அருகே 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் திருட்டு; நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை


திருக்கனூர் அருகே 2 வீடுகளில் புகுந்து நகை-பணம் திருட்டு; நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 6 Oct 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே நள்ளிரவில் 2 வீடுகளில் புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே உள்ள மண்ணாடிப்பட்டு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ்(வயது 65) லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார்.பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பதற்றத்துடன் அவர் பீரோவை பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க சங்கிலி, மோதிரம், தங்க காசு வெள்ளி குத்து விளக்கு, பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.இந்த திருட்டு குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பீரோவை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு கைரேகைகளை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

இதே போல் அதே பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அங்கு கட்டிலில் வைக்கப்பட்டு இருந்த மோதிரம், பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.இந்த சம்பவம்குறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்து கைவரிசையை காட்டி விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை திருக்கனூர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story