சட்டசபை தேர்தலில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் பிரசாரம் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள்


சட்டசபை தேர்தலில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் பிரசாரம் காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:30 AM IST (Updated: 6 Oct 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி நடைபெறும் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டங்களில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி நடைபெறும் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டங்களில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சட்டசபை தேர்தல்

மராட்டியத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசின் 15 ஆண்டுகால கூட்டணி ஆட்சி கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இந்த முறை இழந்த ஆட்சியை கைப்பற்றுவதற்காக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்ட நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவருவதற்காக பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர். இதில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சார்பில் தலா 40 நட்சத்திர பிரசார தலைவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சோனியா காந்தி, மன்மோகன் சிங்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரசாரம் செய்யாமல் ஒதுங்கி இருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்காக பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மராட்டியத்தில் பிரசார சுற்றுப்பயணம் செய்கிறார். இதுதவிர மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரிகள் சுசில்குமார் ஷிண்டே, பிரிதிவிராஜ் சவான், அசோக் சவான், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல், ராஜஸ்தான் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்டோர் மராட்டியத்திற்கு பிரசாரத்திற்காக வருகிறார்கள்.

தேசியவாத காங்கிரஸ்

இதேபோல முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரசாரத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மிலிந்த் தியோரா, பிரியா தத் மற்றும் கட்சிக்கு எதிரான கருத்து தெரிவித்த முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் ஆகியோரது பெயர்கள் காங்கிரசின் நட்சத்திர பிரசார தலைவர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சியின் தலைவர் சரத்பவார், மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், மூத்த தலைவர்கள் பிரபுல் பட்டேல், சகன் புஜ்பால், அஜித் பவார், சுப்ரியா சுலே எம்.பி. உள்ளிட்டோர் பிரசாரம் செய்கிறார்கள்.

Next Story