டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் துணிகரம்


டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு  சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் துணிகரம்
x
தினத்தந்தி 6 Oct 2019 4:00 AM IST (Updated: 6 Oct 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச்சென்றுள்ளனர்.

சோளிங்கர், 

சோளிங்கர் அருகே வடகடப்பந்தாங்கல் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மேற்பார்வையாளராக சீனிவாசனும் மற்றும் விற்பனையாளரும் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் விற்பனை முடிந்ததும் இவர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு கடைக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்களை திருடிக்கொண்டு தப்பிவிட்டனர். நேற்று காலை வழக்கம்போல் மேற்பார்வையாளர் சீனிவாசன் கடையை திறந்தபோது மதுபாட்டில்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கடையின் பின்பகுதிக்கு சென்றபோது சுவரில் துளையிடப்பட்டிருப்பதை அவர் பார்த்தார். எனவே மர்மநபர்கள் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை திருடிச்சென்றதை அறிந்தார்.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு சீனிவாசன் தகவல் அளித்து விட்டு அவர்களது ஆலோசனையின்படி கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் திருட்டு நடந்த டாஸ்மாக் கடைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தில் 3 அல்லது 4 பேர் சேர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும் எனவும், வாகனத்தை கொண்டு வந்து நிறுத்தி திருடிய மதுபாட்டில்களை அதில் ஏற்றிக்கொண்டு தப்பியிருக்க வேண்டும் எனவும் போலீசார் கருதுகின்றனர். திருடப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்கள் உருவம் ஏதும் பதிவாகியுள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருவதோடு, சம்பவத்தன்று சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்ததா? என பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Next Story