அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 14-ந் தேதி தொடக்கம்


அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி 14-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2019 11:00 PM GMT (Updated: 6 Oct 2019 5:49 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளில் கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் பணி வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் விவசாய பெருங்குடி மக்களாகிய நீங்கள் நல்லமுறையில் கால்நடைகளை பேணிக்காத்து, வளர்த்து வருகிறீர்கள். கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால் குளம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்து விடும். வெயில் காலத்தில், நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், அடர்த்தியான ரோமமும் காணப்படும். பால் கறவை முற்றிலும் குறைந்துவிடும்.

பாதுகாத்து கொள்ளவும்

கறவைப்பசுக்களில் பால் குடித்துவரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத்தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிக பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கா வண்ணம் இருப்பதற்கு, மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். இம்மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால், கோமாரி நோய் தடுப்புத் திட்டம் 17-வது சுற்றின் கீழ் வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கி 21 நாட்களுக்கு கோமாரி நோய்க்கான தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்போது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கோமாரி நோய் தடுப்பூசி போட்டு, தங்கள் கால்நடைகளுக்கு நோய் வராமல் பாதுகாத்து கொள்ளவும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story